Sri:
சாளக் கிராமம் பூஜை செய்யும் முறை
சாளக்கிராமத்தின் தெய்வீக சக்தி
மிகவும் எளிமையாக சாளக் கிராமத்திற்கு பூஜை செய்யும் முறையை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
சாளக்கிராமத்தை
1. பன்னீராலும் ,
2. பச்சைக்கற்பூரம் கலந்த நீராலும்,
3. பாலாலும்,
4. சந்தனத்தால்,
5. அபிஷேக மஞ்சள் ,
6. கரும்புச்சாறு (இருந்தால்) ,
7. அபிஷேக திரவியபொடி கலந்த நீர்
8. நெய் , தேன் மற்றும் தயிராலும்,
9. விபூதி கலந்த நீராலும்,
10. கங்கை நீராலும் ..................
அபிஷேகம் செய்யலாம். அவ்வாறு செய்யும் பொழுது, ஸ்ரீ ருத்ரம் மற்றும் பஞ்ச சூக்தம் ( புருஷ சூக்தம் , ஸ்ரீ சூக்தம் , விஷ்ணு சூக்தம், நாராயண சூக்தம் , துர்கா சூக்தம் ) பாராயணம் செய்யலாம்.
இவற்றுடன் அந்ததந்த உபாசனை மூர்த்திகளின் ஸஹஸ்ரநாமங்களோ, அல்லது அஷ்டோத்ரங்களோ பாராயணம் செய்யலாம். மேலும் விருப்பமான ஸ்துதிகள், ஸ்தோத்ரங்கள் பாராயணம் செய்வது சாலச்சிறந்தது.
அபிஷேகம் முடிந்தவுடன் மடி வஸ்திரத்தால் (தூய்மையான துணியால் ) துடைத்து சந்தனம், குங்குமம் ....விபூதி இட்டு ,.......ஆசனம், பாத்யம், அர்க்யம் , ஆசமனம் செய்து ......... துளசி , வில்வம் , மலர்களால் அர்ச்சித்து , தூப , தீப ,நைவேத்யம் செய்து.........
ஸ்நானம், கந்தம் , புஷ்பம் ............கற்பூர நீராஞ்சனம் என பூஜா புத்தங்களில் விவரித்துள்ளதை போல அர்ச்சனைகள் செய்து ஆனந்திக்கலாம்.
சாளக்கிராமம் உள்ள வீடு பாடல் பெற்ற தலத்தின் சிறப்பினைக் கொண்ட புண்ய க்ஷேத்ரம். 12 சாளக்கிராமம் கொண்ட வீடு ஒரு திவ்ய தேசம்
ஆகும். அங்கு லக்ஷ்மி நித்ய வாசம் செய்கிறாள். மேலும் பாவங்கள் குறைந்து அழிந்து விடும்.
மஹாபெரியவா ஒருமுறை, " எங்கு சாளக்கிராம பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஒரு குறையும் வருவதில்லை. அதைச்சுற்றி சுமார் 2km தூரத்திற்குள் உயிர் விடும் எந்த உயிரினமும், அதன் கடைசி நேரத்தில் அந்த புண்ணிய பூஜையின் அதிர்வுகளை பெற்று.........வாசனைகளும் , வினைகளும் குறைந்து சாந்தியாக, அமைதியடைந்து அதனால் அதன் மறுபிறவி மிக சிறந்ததாக அமையப் பெறுகின்றன " என்று கூறி இருக்கிறார் . மேலும் அந்த வீட்டிலுள்ளோர்கள் கொடிய மரணம் , மோசமான விபத்துகள் , துர்மரணம் போன்றவை சாளக்கிராம பூஜை நடைபெறும் வீட்டில் நிகழ்வதில்லை.
தமிழ் திவ்யப் பிரபந்தங்கள் முதலியன பாடி , அபராத சமரோபணம் செய்து, நமஸ்கரித்து, அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய பிரசாதம் வீட்டில் எல்லோருக்கும் கொடுத்து, நாமும் தீர்த்தம் பருகி , பிரசாதம் உண்டு , ஆராதனக்ரமம் செய்து பூஜையை முடித்துக் கொள்ளலாம்
♥️சாளக்கிராம கற்களின் நிறங்களும் வடிவங்களும் அதன் பலன்களும்♥️
முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக கருதப்படுகிறது. மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை.
சக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.
முன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும். இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.
இடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது.
வட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும்.
குடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
சக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படும். அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
நீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.
பச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தையும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.
வாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.
கருப்பு நிறத்தில் உள்ளவை விஷ்ணுவின் அம்சமாக இருந்து பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும்.
உண்மையான சாளக்கிராம கல்லுடன் பால் அல்லது அரிசியை குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியிருக்கும். எதிர்மறை எண்ண அலைகளை, அதிர்வுகளை உட்கிரகிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை உணரலாம்.
வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத் தகுதியில் வைத்து பாவிக்க வேண்டும் என்பர் . 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை காலை , மாலை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட அவதாரம் எடுத்த திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
வஜ்ர கிரிடம்சாளக்ராம மகிமை.....!!!
வைதீகமான குடும்பங்களில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டும் வருவது சாள க்ராமம்.
இது உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிவப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை பெட்டியில் வைத்திருப்பார்கள்.
தலைமுறை, தலைமுறையாக வழி, வழியாக குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இதனை பெற்று ஆராதித்து வருகிறார்கள் என்பதே இது எவ்வளவு புனிதமானது, மதிப்பிற்குரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை விளக்கும்.
இது கன்னிகாதானத்தின் போது, கன்னிகையுடன் வரனுக்கு தானம் செய்யப்படுவதும் உண்டு.
சாளக்ராமசிலா என்பது விஷ்ணு அம்சம் உடையது. இதனுடைய மந்திரத்திற்கு ரிஷி ஸ்ரீபகவான். தேவதை நாராயணன்.
சாளக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கக்கூடிய ஒருவிதமான கல்.
கண்டகி நதிக்கு வடக்கிலும் ஹிமாசலத்திற்கு தெற்கிலும் பத்து யோஜனை விஸ்தீர்ணமுள்ள சாளக்ராமம் என்ற புண்ணிய பூமியுள்ளது.
இங்கு துவாரவதி சாளக்ராமத்தில் ஒன்று கூடுகிறது.
மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்தலம் இது என்பதில் சந்தேகமே கிடையாது.
முக்திமதி அல்லது முக்திக்ஷேத்ரம் என்று சொல்லப்படுவது காட்மாண்டுவிலிருந்து 140 மைல் தொலைவில் இருக்கிறது.
இதையே சாளக்ராம க்ஷேத்ரம் என்றும் கூறுவர். இவ்வாறு பவிஷ்யோத்தர புராணம் கூறுப்பட்டுள்ளது.
சாளக்ராமத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:
பிரம்மனது வியர்வைத் துளியினின்று கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள்.
அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர்.
அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். இது முடியாது என்பதால் தேவர்களை பூமியில் புழுக்காளாகும் படி சபித்தாள். கோபமடைந்த தேவர்கள் அவளை ஒரு ஜடமாக ஆக சபித்தனர்.
இதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரனையும், ருத்ரனையும் அணுகி அவர்களது பரிஹாரம் கிட்டமுடியாமல், விஷ்ணுவை அண்டினார்.
இரு சாபங்களையும் அகற்ற இயலாது என்று கூறி விஷ்ணு ஒரு உபாயம் கூறினார்.
சாளக்ராம க்ஷேத்ரத்தில் சக்ர தீர்த்தத்தில் தான் வாசம் செய்வது என்றும் அங்கு தேவர்கள் வஜ்ர கீடம் என்ற புழுக்களாகி அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டியது என்றும் கண்டகி என்பவள் ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும் என்றும் ஏற்பாடாகியது.
அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியனவே சாளக்ராம கற்கள்.
பத்ரிநாத்திலுள்ள பிம்பங்கள் சாளக்ராமத்தினால் ஆனவை.
சாளக்ராமத்தை கோர்த்து மாலையாகவும் பிம்பங்களுக்கு அணிவிக்கலாம்.
சாளக்ராமம் உடைந்திருந்தாலும், ஸ்வரூப அழிவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும், அதற்கு ஒரு தோஷமும் இல்லை.
அது குற்றமற்றது.
சாளக்ராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு பூஜா விவரணங்களோ தேவையில்லை.
அது இருந்தாலே சந்துஷ்டியை கொடுக்கவல்லது.
சாதாரணமாக புருஷ சூக்த மந்திரத்தால் பூஜிப்பார்கள்.
அது சிரார்த்த காலங்களில் இருக்க வைப்பது பிதுர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
சாளக்ராம அபிஷேகதீர்த்தத்தை சிரஸில் தெளித்துக் கொண்டு அதை அர்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்ண வேணும்.
இது வைகுண்ட வாசத்தைக் கொடுக்க வல்லது.
சாளக்ராம அபிஷேக ஜலத்தை கீழே கொட்டக்கூடாது.
இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.
இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.
இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், ஸ்ரீதரம், ரிஷிகேசம், பத்மநாபம், தாமோதரம், ஷங்கர்ஷனம், பிரத்யும்னம், நரசிம்மம், ஜனார்த்தனம், ஹரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.
பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து 'சாளக்கிராம சாட்சியாக' சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது.
மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது.
சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல் கூறுகின்றது.
No comments:
Post a Comment