CHARAMA SLOKAM
சரம ஸ்லோகம்.
ஸ்ரீ வைஷ்ணவாளா இருக்கற எல்லாரும் அனுதினமும் பெருமாளுக்கு பண்றப்போ சொல்ல வேண்டிய சுலோகம். ஜீவாத்மாக்களை கரை சேர்க்கற ஒசத்தியான விஷயம்.
"சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் விரஜ
அஹம்த்வா சர்வ பாபேப்யோ
மோஷயிஷ்யாமி மாசுச"
இந்த நாலு வரிகள்ல இருக்க ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒசத்தியான அர்த்தம் இருக்கு.
1. "சர்வதர்மான் பரித்யஜ்ய" - இந்தப் பதத்திற்கு மட்டும் ஆசார்யன் வேதாந்த தேசிகன் ஆறு அர்த்தங்களைக் கர்ப்பிக்கறார்.
(அ) 'பக்தியோகம் முதல் வேறெந்த யோகத்தையும் முழுமையாக கடைபிடிக்க முடியாத நம்முடைய யோக்கியதை இல்லாமையை உணர்ந்து, இங்கிருக்கும் வெறுமையினை உணர்ந்து எல்லா வழிகளையும் விட்டுவிட்டு' என்பது முதல் அர்த்தம்
(ஆ) நம் கையில் ஒன்றுமில்லை. நாம் அசக்தர்கள். எந்த விதமான சக்தியும் இல்லாதவர்கள் என்ற "ஆகிஞ்சந்யத்தை" - நமது சிறுமையை உணர்வது இரண்டாவது அர்த்தம்
(இ) ப்ரபத்திக்கென சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு அங்கங்கள் இல்லையென்று உணர்வது. ப்ரபத்தியொன்று தான் இறுதியானதென்று அறிவது தான் உத்தமம் என்பது மூன்றாவது அர்த்தம்
(ஈ) உயர்ந்த பக்தியோகாதிகளை நம்மால் பண்ண முடியாது என்பதை உணர்ந்து செயல்படுதல் என்பது நான்காவது அர்த்தம்
(உ) அப்படி நம்மால் எளிதாகப் பண்ண முடியாத பக்தி யோகாதிகளை பண்ணியே தீருவேன் என்று பிடிவாதம் கொள்ளுதல் அற்ப ஆசை தானேயன்றி வேறொன்றுமில்லை என்று உணர்தல் என்பது ஐந்தாவது அர்த்தம்
(ஊ) ஒரு க்ஷணார்த்தத்தில் பண்ணைக் கூடிய பிரபத்தி என்பதினை பண்ணாமல், மற்ற மார்க்கங்களை நாடிச் செல்வது தீமையினை விளைவிக்கக் ஓடியது என்பதை உணர்வது ஆறாவது அர்த்தம்
2. "மாம்" - இங்கு பார்த்தனுக்கு சாரதியாய் நின்ற அந்த கீதாசார்யனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அர்ஜுனனுக்கு ஹிதத்தினை எடுத்துச் சொல்லும் வேளையில் க்ருஷ்ணனானவன், "மாம்" என்று உரைக்கும் சமயம், தன்னுடைய திருமேனியினை தொட்டுக் காட்டுகின்றான். இப்படி செய்ததன் மூலம் தன்னுடைய சௌசீல்ய குணத்தினையும் ஸ்வாமித்வத்தினையும் அவன் நமக்கு தெள்ளத் தெளிவாக ஐயமற அறுதியிட்டு சாதிக்கிறான்.
3. "ஏகம்" - ஏகம் என்ற இந்தப் பதமும் பல பொருள் படுகின்றது.
(அ) இந்த சம்சார சாகரத்திலிருந்து நாமெல்லாரும் விடுபட்டு முக்தி பெற அவன் ஒருவனே "ஏகம்" உபாயம். அதாவது அந்த ஸர்வேச்வரன் மட்டும் தான் உபாயம். அவனையடைய நாம் பண்ணும் பிரபத்தி உபாயமாகாது. நம்மை பிரபத்தி பண்ண வைப்பதும் அவன் தான். அதனால் பிரபத்தி அவனுக்கு இணையான உபாயமாகாது.
(ஆ) அப்படி ஒரே உபாயமாய் விளங்கும் அவனை அடைய அவன் ஒருவனே "ஏகம்" உபேயமுமாவான்.
(இ) அவனது க்ருபையினால் நமக்கு பிரபத்தி பிராப்தம் ஆன பின்னால் நம்மைத் தன்னுடைய பொறுப்பாக ஏற்று தனித்து நின்று சரண்யனாக நம்மை ரக்ஷிப்பது அவன் ஒருவனே "ஏகம்"
(ஈ) அப்படி அந்த நாராயணின் திருக்கமல பாதங்களை அடைய தேவையான சக்தியும் ஞானமும் இருந்தும், மிகவும் பரிஷ்ரமப்படும் ஜீவாத்மாக்களை, அவையாவும் சேர்ந்து அளிக்கக்கூடிய பலன்கள் அனைத்தையும் உன் ப்ரபத்தியை ஏற்றுக் கொண்டு நான் ஒருவனே அனுக்கிரஹம் பண்ணுகிறேன் என்று சாதிப்பதானால் "ஏகம்"
(உ) ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெருமாள் என்று சொன்னால் அந்தப் பதத்தில் தாயாரும் சேர்த்தி. அதனால் அந்த திவ்ய தம்பதிகள் ரெண்டு பேரும் எப்போதும் சேர்ந்தே அனுக்கிரஹம் பண்ணுவதனால் "ஏகம்"
4. "சரணம்" - ரொம்ப ஒசத்தியான அர்த்தம் இந்தப் பதத்திற்கு. கர்மாக்களினால் கட்டுண்டு மறுபடி மறுபடி பலவிதமான பிறப்புகள் கொண்டு இந்த பூமியில அல்லாடற ஜீவாத்மாக்களுக்கு ஒரே ஒரு தடவை "சரணம்" அப்படின்னு அவன் திருவடிகள்ல பிரபத்தி பண்ணின்ட்டா, எப்போவும் நான் உன்னைக் காப்பாத்தறேன்னு சத்யசந்தனா நின்னு, சேதனர்கள் அனுபவிக்கறதுக்கு தேவையான வஸ்த்துக்களையும் அவனே அனுக்கிரஹம் பண்றான். பரிபூர்ண சரணாகதி அனுபவத்தை அனுக்கிரஹம் பண்றான்
5. "வ்ரஜ" - நம்மளுடைய ஆத்மாவை அவன் திருவடிகளில் சமர்ப்பித்தல் என்று அர்த்தமாறது. நான் என்னுடையது என்ற அகங்காரத்தினை விடுத்து, அவன் ஒருவனே சக்திமான். நாமெல்லாம் அசக்தர்கள் என்பதை பரிபூர்ணமா உணர்ந்து, பூரணமான விருப்பத்தோட, அவன் காப்பாத்துவான் அப்படிங்கற தைரியத்தோடு, அவன் திருவடிகள்ல ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவதை குறிக்கறது
6. "அஹம்" - இந்தப் பதத்தின் மூலமாக பெருமாள் தன்னோட பராக்கிரமத்தை ஆஸ்ரிதர்களான நமக்கெல்லாம் உணர்த்தறான். நம்மளோட பூர்வ ஜென்ம கர்மாக்களினாலே மறுபடி மறுபடி பிறப்பெடுத்து இந்த பூமியிலே துன்பப்படற ஆஸ்ரிதர்களான நம்மளோட கர்ம பலன்களிலேர்ந்து விடுவிச்சு தன்னோட திருவடிகள்ல சேத்துக்கற அபாரமான சக்திமான் நான் ஒருவனே என்று அறுதியிட்டு கூறுகின்றான்.
7. "த்வா" - இந்தப் பதத்திற்கான அர்த்தம் – “நான் மட்டுமே சாஸ்வதமானவன். என் திருவடிகள் மட்டுமே அடையத் தக்கது. என்னுடைய கருணையினால் பிறக்கும் அனைவருக்கும் கிடைக்கும் செல்வமும் ஐஸ்வர்யங்களும் ஸ்திரமில்லாதது. இதெல்லாத்தையும் அனுக்கிரஹம் பண்ணின என்னை அடைய முயற்சிகள் மேற்கொண்டு முடியாமல், உபாயமான என்னை அடைய வழியும் (உபேயமும்) நானே என்பதனை உணர்ந்து "உன் திருவடிகளே சரணம்" என்று என்னையே வந்து அடைவது”
8. "ஸர்வபாபேப்ய:" - அந்த ஸ்ரீமன் நாராயணனது திருவடிகளை அடைவதற்கு பிரதிகூலமாக அமையும் விஷயங்களையும், அவனது திருவடிகளே அடைவதற்கு உகந்தது என்ற ஞானத்தினை பெறுவதற்கு தடையாக இருக்கும் பிரதிகூலங்களை எல்லாவற்றையும் அகற்றி, "இவன் நம் திருவடிகளில் நாம் ஏற்றுக் கொள்ளத் தக்கவன்" என்று அனுக்கிரஹம் பண்ணுபவன்.
9. "மோஷயிஷ்யாமி" - இந்த சம்சார சாகரம் நம்மளுக்கு உண்டாக்கற தொடர்ச்சியான பிரச்சனைகள் மற்றும் துயரங்கள்னு இந்த பூமியே உழன்டுன்றுக்கும் போதே, பரமபதத்திலே ஏள்ளியிருக்க அந்த பரமபத நாதனுக்கு நித்ய சூரிகளோடும் முகதர்களோடும் சேர்ந்து நித்ய கைங்கர்யம் பண்ணனும்னு ஒரு ஜீவாத்மா ஆசைப்படற அந்தக் க்ஷணம் அவனோட சகல கர்மாக்களையும் ஒழித்து விடுகின்றேன் அப்படின்னு சாதிச்சிருள்ரார் பெருமாள். அவன் அப்படி சங்கல்பிச்சிட்டா, இந்த தேகத்துடன் நமக்கு உண்டான சம்பந்தமானது நீங்கப் பெறும் போது, பரிபூரணமான பகவதனுபவமானது நமக்கு உண்டாரது.
10. "மாசுச" - இந்த சம்சார சாகரத்துலேர்ந்து முக்தி பெறவும், இங்கேர்ந்து தப்பிச்சுண்டு போகவும் வேறெந்த வழியும் இல்லேன்னு மனசார உணர்ந்து, தன்னோட திருவடிகளே சரணம் என்றிருக்கும் ஆஸ்ரிதர்களை காப்பது என்ற திருவுள்ளம் கொண்டு, கர்மாக்களின் பலன்களினால் அவர்கள் மறுபடி மறுபடி இந்த பூமியில் வந்து பிறவாமல் காப்பேன். கவலைப்படவேண்டாம். நானிருக்கேன் அப்டிங்கறான் அந்த பரமாத்மா.
இப்படி எதுவுமே அவன் நேரே வந்து சாதிக்காமலே ப்ரஹ்லாதனுக்கு அவன் மேலே அளப்பரியன நம்பிக்கை. பக்தி. அவன் மட்டும் தான் சாஸ்வதமானவன். வேறொரு திருவடி அடைய மாட்டேன் அப்படிங்கற வைராக்கியம். அந்த வைராக்கியம் தான் அவனை கரை சேர்த்தது. அந்தப் பரமனை சிங்க ரூபம் தரித்து வரவழைச்சது. அவனுக்காக அசாத்தியமான விஷயங்களை பண்ண வெச்சது.
"மாசுச" என்ற அவனது திருவாக்கிற்க்கேற்ப பிரஹலாதன் எதைப் பத்தியும் கவலைப்படல. யாரை பாத்தும் பயப்படலை. அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் ஸ்ரீமன் நாராயணன் தான். அதனால தான் அவனை தன்னெதிரே தன்னோட குறைவில்லாத பக்தியினால், "மாமேகம் சரணம் விரஜ" அப்படின்னு அவன் திருவடிகளிலே மட்டுமே சரணடைஞ்சு தன் கண்ணெதிரே வரவழைச்சான்.
க்ருஷ்ணாவதாரத்துல பெருமாள் அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணினப்போ தான் நம்மளுக்கு இந்த சரம ஸ்லோகம் ஆப்ட்டுது. க்ருஷ்ணாவதாரத்துக்கு முன்னாலே உண்டான ந்ருஸிம்ஹாவதாரத்தை எடுத்துண்டோம்னா, ப்ரஹ்லாதனானவன் "சர்வதர்மான் பரித்யஜ்ய" - இதற்க்கு அர்த்தமா சொல்லப்பட்ட ஆறு விஷயங்களும் அவனுக்கு பொருந்தித்து. அவன் பண்ணினதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான் - சரணாகதி.
"மாம்" "ஏகம்" - அப்படின்னு அந்தப் பரமன் சொன்னதையும் அவன் கடைபிடிச்சிருக்கான். அவன் தான் எல்லாமே. அவன் ஒருவன் மட்டும் தான் சக்திமான் அப்டிங்கறதை உணர்ந்து அதன் படி இருந்திருக்கான். ஸ்ரீமன் நாராயணன் ஒருவனையே அவன் சரணடைஞ்சிருக்கான். வேறொரு தேவதாந்திரத்தை தேடிப் போகலை. என்ன ஒரு மஹாவிஷ்வாசம்.
"சரணம் வ்ரஜ" - இதையும் பிரஹலாதன் பண்ணிருக்கான். ஸ்ரீமன் நாராயணனுண்ட பரிபூரணமான ஆத்ம சமர்ப்பணம் பண்ணிருக்கான். இந்த நிஷ்ச்சலனமான பக்தி தானே, சரணாகதி தானே, ஆத்ம சமர்ப்பணம் தானே, ஜீவாத்மாக்களை கட்டுண்ணப் பண்ற பெரு மாயனான (ஆழ்வார் திருவாக்கு) அவனையே கட்டுண்ணப் பண்ணித்து. எவ்ளோ ஒசத்தியான சத்யமான உறவு இது. ஆண்டாள் சாதிச்சு அருளினார் போலே 'உன்தன்னோடுறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது".
உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து
No comments:
Post a Comment